வனத்துறை அதிகாரிகளை தாக்கியது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் கலாபவன் மணி பொலிசில் சரணடைந்தார்.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. சமீபத்தில் இவர் கேரளாவில் உள்ள சுற்றுலா தலமான அதிரப்பள்ளிக்கு சென்றார்.
அப்போது அவர் காரை வனத்துறை அதிகாரிகள் சோதனையிட முற்பட்டனர். அதற்கு கலாபவன் மணி எதிர்ப்புத் தெரிவித்ததால், அவருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்பின் அவர் கார் செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். அப்போது காரை ஓட்டிச் சென்ற நடிகர் மணி, 20 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அங்கே வந்து வனத்துறை அதிகாரிகள் சிலரை தாக்கினார்.
இதில், காயமடைந்த அதிகாரிகள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு பொலிசிலும் புகார் அளித்தனர்.
புகாரை பெற்ற பொலிசார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றாலும், கலாபவன் மணியை விசாரணைக்கு வரும்படி அழைத்தனர்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த மணி, தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் முன்ஜாமின் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், வனத்துறை அதிகாரிகள், எந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனரோ, அங்கு கலாபவன் மணி சரண் அடைய வேண்டும். பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதையடுத்து சாலக்குடி வெட்டிலபாரா காவல் நிலையத்தில் கலாபவன் மணி சரணடைந்தார்.