மோட்டாரை பழுது பார்ப்பதற்காக கிணற்றில் இறங்கிய கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மயக்கம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆவடியை அடுத்த திருநின்றவூர் பக்தவச்சலம் நகர் அம்பேத்கர்
தெருவை சேர்ந்தவர் ராஜா (எ) நாகராஜ் (36). கூலித் தொழிலாளி.
மனைவி போதுமணி (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் தலக்கை கிராமத்தை சேர்ந்த இவரது உறவினர் மணிகண்டன் (24). இவர், சில நாட்களுக்கு முன்பு ராஜா வீட்டுக்கு வந்தார்.
ராஜா வீட்டில் உள்ள கிணற்றின் மோட்டார் நேற்று திடீரென பழுதானது. அதை சரி செய்வதற்காக மணிகண்டனை ராஜா கிணற்றில் இறக்கியுள்ளார். அப்போது மணிகண்டனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை பார்த்த ராஜா, அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கினார். மயங்கி விழுந்த இருவரும் சேற்றில் சிக்கியபடி உயிருக்கு போராடினர்.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரி தியாகராஜன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கிடந்தவர்களை மீட்க முயன்றனர். மணிகண்டனை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ராஜாவை காப்பாற்ற போராடிய தீயணைப்பு வீரர் ஜெயச்சந்திரனுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை சக வீரர்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ராஜாவை மீட்கும் பணி தொடர்ந்தது. இரவு 11 மணிக்கு அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். ராஜா உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆக்சிஜன் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம்
தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்கு செல்லும்போது ஆக்சிஜன் சிலிண்டர், கயிறு, இரும்பு கொக்கி உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலான தீயணைப்பு நிலையத்தில் இந்த உபகரணங்கள் இல்லை.
இதனால் மீட்பு பணியின்போது உயிர்பலி ஏற்படுகிறது. ஆக்சிஜன் இல்லாததால்தான் ராஜாவை காப்பாற்ற முடியவில்லை. அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர காலதாமதம் ஆனதும் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது.