கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். ‘பக்கத்து வீட்டுல ஒரு தாத்தா. 65 வயது ஆகிறது. கிழவர் கெட்ட புத்திக்காரர். மிட்டாய் வாங்கி
தருவதாக கூறி என் மகளை சில்மிஷம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
சம்பந்தப்பட்ட முதியவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர் போலீசார். சிறுமியையும் வைத்துக் கொண்டு அவரை விசாரித்தனர். ‘தப்பே செய்யலீங்க’ என்று சத்தியம் செய்தார் தாத்தா. நம்புவதா, நம்பாமல் இருப்பதா? என்று போலீசுக்கு குழப்பம்.
சிறுமியிடம் கேட்டதில், தாத்தா அவளிடம் தவறாக நடக்கவில்லை என்பது தெரிந்தது. ‘ஆனா, தாத்தா உன்கிட்ட தவறா நடந்துக் கிட்டதா உங்கம்மா கம்ப்ளைண்டு பண்ணியிருக்காங்களே’ என்று போலீஸ் கூறினர். ‘என் பாட்டி தான் அப்படி சொல்லச் சொன்னாங்க’ என்றாள் சிறுமி. போலீசுக்கு அதிர்ச்சி. சிறுமியின் பாட்டியை வரவழைத்து விசாரித்தனர்.
‘பக்கத்து வீட்டு கிழவர் வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு என்னையும், போக வரும் வயதான பெண்களையும் பார்த்து கிண்டல் அடிப்பார். இது எனக்கு பிடிக்கவில்லை. பேத்தியிடம் சில்மிஷம் செய்ததாக பொய் புகார் சொல்லி, உள்ளே தள்ள திட்டம் போட்டேன்’ என்றார்.‘பழிக்கு பழி’ பாட்டியையும் ‘கிண்டல்’ தாத்தாவையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.