விருத்தாசலத்தில் தண்டவாளத்தில் விழுந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க தண்டவாளத்தில் குதித்த மாணவி எதிர்பாராத விதமாக ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த காஞ்சனா(14) , இவர் நேற்று இரவு சுமார் 12.45 மணிக்கு ஜெயங்கொண்டத்திலிருந்து விருத்தாசலத்திற்கு அவரது பெற்றோருடன் வந்தார்.
அங்கிருந்து கோவை செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தார். மாணவி காஞ்சனா தண்ணீர் பாட்டிலை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தண்ணீர் பாட்டில் தவறி தண்டவாளத்தில் விழுந்தது.
உடனே காஞ்சனா அதை எடுக்க உயரமான பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்தார். தண்ணீர் பாட்டிலை அவர் எடுத்துக் கொண்டிருந்த போது அந்த தண்டவாளத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
இதை பார்த்ததும் காஞ்சனாவை அவரது தாய் காந்திமதி கை கொடுத்து தண்டவாளத்திலிருந்து மேலே வேகமாக தூக்க முயன்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மாணவி காஞ்சனா மீது மோதிவிட்டு சென்றது. இதில் உடல் நசுங்கி காஞ்சனா அதே இடத்தில் பலியானார். தங்கள் கண் முன்னே மகள் பலியானதை கண்டு பெற்றோர்கள் துடித்து போனார்கள்
இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.