இங்கிலாந்தில் உள்ள ஒரு வனவிலங்கு காப்பகத்தில் இருந்த புலி ஒன்றுக்கு உணவளிக்க சென்ற பெண் காப்பக பணியாளரை புலி கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட இங்கிலாந்தில் உள்ள சவுத் லேக்ஸ் வனவிலங்கு காப்பகத்தில் அழியும் நிலையில் உள்ள சைபீரியா மற்றும் சுபத்ரா பகுதியை சேர்ந்த புலிகள் இயற்கை சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் புலிகளுக்கு இறைச்சி போடுவது, பராமரிப்பது போன்ற பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு, இங்கு பணியாற்றும் சாரா மேக்லே (24) என்ற பெண் ஒரு புலிக்கு இறைச்சி போட்டுக் கொண்டிருந்தார்.
சற்றும் எதிர்பாராத வேளையில் அவர் மீது பாய்ந்த புலி, அந்த பெண்ணை தாக்கியது. அப்பெண்ணை கடித்து இழுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் விரைந்த புலியை, பிற காப்பக பணியாளர்கள் பயமுறுத்தி அப்பெண்ணை மீட்டனர்.
தொண்டை மற்றும் தலை பகுதிகளில் படுகாயமடைந்த அந்த பெண் ராயல் பிரெஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துப்போனார்.
இச்சம்பவத்தையடுத்து, வன விலங்கு காப்பகத்தை சுற்றிப் பார்க்க வந்த பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமான புலியை மயக்க குண்டால் சுட்டு பிடித்த அதிகாரிகள் அதை தனிமைப்படுத்தி கூண்டில் அடைத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.