பூஜை விளக்கை சுத்தப்படுத்தாததால் தங்கையுடன் ஏற்பட்ட சண்டையில், சபரிமலைக்கு மாலை போட்டிருந்த 6ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து இறந்தான். இந்த சம்பவம், அயனாவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் மேட்டு தெருவில் வசிப்பவர் ராமு (38).
மனைவி கலா (35). இருவரும் கட்டிட தொழிலாளர்கள்.
இவர்களது மகன் ராஜேஷ் (11), மகள் அனுசுயா (9). எல்லாரும் முதல் மாடியில் உள்ள குடிசை வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ராஜேஷ் 6ம் வகுப்பு படித்தான். அனுசுயா 4ம் வகுப்பு படிக்கிறாள். ராமுவும் ராஜேஷும் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தனர்.
இந்நிலையில், ராமுவும் கலாவும் நேற்று காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் குழந்தைகள் இருவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பினர். ராஜேஷ் குளித்து விட்டு ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய தயாரானான். அப்போது சாமி விளக்கை கழுவி சுத்தம் செய்யுமாறு அனுசுயாவிடம் கூறியிருக்கிறான்.
பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்று கூறி அவள் மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர், அனுசுயா படிக்க சென்றுவிட்டாள். தனியாக இருந்த ராஜேஷ் திடீரென வீட்டுக்குள் ஓடி, கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டான்.
இதை பார்த்த அனுசுயா, உடனடியாக பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சென்று கூறினாள். அவர்கள் மாடிக்கு சென்றபோது குடிசை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் ராஜேஷ் உள்ளே இருந்து கதறியபடி வெளியே ஓடிவந்து விழுந்தான். உடனடியாக தீயை அணைத்து அவனை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ராஜேஷ், இன்று அதிகாலை இறந்தான். மகன் உடலை பார்த்து பெற்றோரும் தங்கையும் கதறித் துடித்தனர். சிறுவன் தீக்குளித்ததில் வீடும் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக, அயனாவரம் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக