சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அங்காடிதெருவில் அஞ்சலியுடன் கதாநாயகனாக நடித்தவர் சின்னாளபட்டியை சேர்ந்த மகேஷ்.
இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மகேஷ் லாஸ்டு பெஞ்ச் என்ற மலையாளப்படத்தில் நடித்தார்.
இவர் சினிமா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சின்னாளபட்டிக்கு வந்து விடுவார். தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
தற்போது சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் விழாவில் கலந்து கொள்வதற்காக சின்னாளபட்டி வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் படித்த நான் வாலிபால் வீரர்.
நெல்லையில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியபோது அங்காடிதெரு திரைப்படத்திற்காக லோக்கேசன் பார்ப்பதற்காக அங்கு வந்த இயக்குநர் வசந்தபாலன் என்னை பார்த்து அங்காடிதெருவில் கதாநாயகனாக தேர்வு செய்து நடிக்க வைத்தார்.
அந்த படம் நல்ல வெற்றியை தந்தது. என் குருநாதர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க இன்றும் ஆசையாக உள்ளது. இதனை தொடர்நது வெயிலோடு விளையாடு படத்தில் நடித்துள்ளேன். அந்த படம் விரைவில் திரைக்கு வரும், அந்த படமும் நல்ல வெற்றியை தேடித்தரும். மலையாளத்தில் லாஸ்டு பெஞ்ச் படத்திலும் நடித்துள்ளேன்.
இவை தவிர தற்போது யாசகன், அடித்தளம், வேல்முருகன் போர்வெல், மழையில் என் கையெழுத்து ஆகிய படங்களிலும் நடித்து வருகிறேன். அடித்தளம் படத்தில் கதாநாயகியாக நடித்த ஆருஷீ தான் வேல்முருகன் போர்வெல் படத்திலும் கதாநாயகி. எனது முதல் பட கதாநாயகி அஞ்சலி அவ்வப்போது போனில் பேசுவார் கடந்த 2 மாதமாக என்னோடு தொடர்பு கொள்ளவில்லை.
தற்போது சென்னை வளசரவாக்கத்தில் அப்பார்ட்மென்டில் வசித்து வந்தாலும் எங்கள் ஊரான சின்னாளபட்டியில் நடைபெறும் எந்த திருவிழாவிலும் வந்து கலந்து கொள்வேன்.
தற்போது சின்னாளபட்டியில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்காக வந்துள்ளேன். நண்பர்கள், உறவினர்கள் இருப்பது சந்தோசத்தை அளிக்கிறது. நடிகர் விஜய், சூர்யா ஆகியோரை எனது ரோல் மாடலாக எடுத்துள்ளேன்.
0 கருத்து:
கருத்துரையிடுக