புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய முதல் லீக் போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம்
மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக சகாவும், ஹசியும் களமிறங்கினார்கள். தொடக்கம் முதல் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுமையாக கையாண்டு விளையாடி வந்த சகா 18 ரன்கள் எடுத்த நிலையில் அவனா பந்தில் மார்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். ஹசியுடன் இணைந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறியடித்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய ஹசி, பியூஸ் சாவ்லா பந்தில் விக்கெட் கீப்பரால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து கேப்டன் டோனி தன்னுடைய பங்குக்கு 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப சென்னை அணி 12.1 ஓவர்களுக்கு 92 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. டோனியைத் தொடர்ந்து ரெய்னாவுடன் மோர்ர்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை திறமையாக கையாண்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சென்னை 166 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோர்கல் அவனா பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரெய்னா 53 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். இவருடைய அதிரடியில் 7 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 186 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

சுரேஷ் ரெய்னா 100 ரன்களுடனும், ஜடேஜா 5 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். சென்னை அணி கடைசி 10 ஓவரில் மட்டும் 117 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அவனா 2 விக்கெட்டுகளும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பொமர்ஸ்பேச் 9 ரன்னில் சர்மா பந்திலர் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து மார்ஷ் களம் இறங்கினார். மந்தீப் சிங் 15 ரன்கள் எடுத்த நிலையில் சர்மா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது பஞ்சாப் அணி  6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு மார்ஷ் உடன் கேப்டன் டேவிட் ஹசி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஆனாலும் இந்த ஜோடி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ஹசி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மார்ஷ் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சென்னை அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள். இதனால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிவிடும் என்ற நிலை உருவானது.

24 பந்தில் 54 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 17-வது ஓவரை மோரிஸ் வீசினார். அந்த ஓவரில் 12 ரன் எடுக்கப்பட்டது. இதனால் 18 பந்தில் 42 ரன் தேவைப்பட்டது. 18-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரிலும் 12 ரன் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி இரண்டு ஓவரில் 30 ரன் எடுக்கப்பட்டது. 19-வது ஓவரை மோரிஸ் வீசினார். அந்த ஓவரில் 11 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் வெற்றி பெற 19 ரன் தேவைப்பட்டது.

முதல் பந்தில் மார்ஷ் கிளீன் போல்டானார். அடுத்த பந்தில் குர்கீரத் சிங் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் சென்னை அணியின் வெற்றி உறுதியானது. 3-வது பந்தில் மில்லர் இரண்டு ரன், 4-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். 5-வது பந்தில் சதீஷ் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் கோனி ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் சென்னை அணி 14 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 11 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற் 'பிளே ஆப்' ஆன அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிராவோ இந்த போட்டியில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த ஐ.பி.எல். சீசனில் 19 விக்கெட் எடுத்து பர்பிள் தொப்பியை கைப்பற்றினார்.

இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றி பெற்று பெங்களூர் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2011-ம் ஆண்டு பெங்களூர் அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top