புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் சூதுகவ்வும் பலவிதங்களில் தமிழுக்கு முக்கியமான திரைப்படம்.



கதாபாத்திரங்கள் சீரியஸாக தங்கள் வேலையை செய்து கொண்டிருப்பார்கள். பார்க்கிற நமக்கு சிரித்து மாளாது. மும்பை எக்ஸ்பிரஸில் கமல் முயன்று பார்த்த இந்த காமெடி சூதுகவ்வும் படத்தில் ஒரு முழுமையை எட்டியிருக்கிறது.

weird -டான கதாபாத்திரங்களை தமிழ் சினிமா அவ்வளவாக உருவாக்குவதில்லை. விஜய் சேதுபதி நடித்திருக்கும் தாஸ் கதாபாத்திரம் அந்தக் குறையை போக்குகிறது.

ஹீரோ, வில்லன், நல்லவன், கெட்டவன் என்ற வழக்கமான சினிமா வரைமுறைகளை களைந்து புத்துணர்ச்சியான அனுபவத்தை படம் தருகிறது.

ஐந்து விதிமுறைகளை வைத்துக் கொண்டு, அதிக சேதாரமில்லாமல் ஆட்களை கடத்தி செய்கூலி வாங்கும் ஒரு அமெச்சூர் கிட்நாப்பர் தாஸ். மாமா என்று அரை டவுசரும் அரைலூசுமாக தாஸுடன் ஒட்டிக் கொண்டு திரியும் ஷாலு. இவர்களுடன் எதிர்பாராதவிதமாக மூன்று வெட்டி ஆபிசர்கள் இணைந்து கொள்கிறார்கள்.

வாரம் ஒரு கிட்நாப்பும், கை நிறைய காசுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்க, நேர்மையான அமைச்சர் ஞான உதயத்தின் மகன் அருமை பிரகாசத்தை கடத்தும் ஆஃபர் வருகிறது. இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு கிட்நாப்பின் ஐந்து விதிமுறைகளை தெருக்கோடியில் போட்டு அருமை பிரகாசத்தை கடத்துகிறார்கள். அமைச்சர் பைசா தரமாட்டேன் என்கிறார். கடத்தப்பட்ட மகனோ, இரண்டு கோடி அப்பாவிடம் வாங்கித் தருகிறேன், பட், பிப்டி பிப்டி என்று டீல் பேசுகிறான். கடத்தல் நாடகம் கைகலப்பு, விபத்து என்று கலகலக்க, ரவுடி போலீஸ் ஒருவரை கடத்தல்காரர்களை பிடிக்க அமைச்சர் நியமிக்கிறார். முடிவு என்ன என்பதை சுவாரஸியமாகவும், சிரித்து வயிறு வலிக்கும்படியும் கூறியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி படத்துக்குப் படம் மெருகேறி வருகிறார். தாடியும், மீசையுமாக பட்லர் இங்கிலீஸ் தெளித்த உரையாடல், சோம்பேறித்தனமான பாடிலாங்வேஜ; என ஹீரோயிசம் துளியும் எட்டிப் பார்க்காத கொஞ்சம் மறைகழன்ற கேரக்டர். லூஸுத்தனமாக ஒரு பொண்ணு சம்பந்தமில்லாமல் அவருடன் சுற்றிக் கொண்டிருக்கிறதே என்று யோசிக்கையில் திரைக்கதையில் வரும் ட்விஸ்ட் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தையும், படத்தின் ப்ளேவரையும் அப்படியே மாற்றிப் போடுகிறது. இப்படி படம் நெடுக பல ட்விஸ்டுகள். திரைக்கதைக்கு வலிமை சேர்ப்பதே இந்த திருப்பங்கள்தான்.

வெட்டி ஆபிஸராக வரும் மூவரும் செம க்யூட். சின்ஹா, நயன்தாராவுக்கு கோயில் கட்டி பெண்களின் அடி தாங்காமல் சென்னை வந்தவர். ரமேஷ் தண்ணி வண்டி. அசோக் ஒரு பெண்ணால் வேலை இழந்தவர். மூவரில் சின்ஹாவும், ரமேஷும் வெளிப்படுத்தும் முகபாவங்களும், டைமிங்கும் டாப். அதேபோல் படம் எடுக்கும் டாக்டராக வரும் ஆருர்தாஸ். அமைச்சரின் மகனாக வரும் அருமை பிரகாசத்தை அறிமுகப்படுத்தும் போதே அவருடைய கதாபாத்திரத்தை ஒரளவு ஊகிக்க முடிகிறது.

சாதாரண வசனங்கள் சரியான இடங்களில் வரும் போது பத்து பன்ச் டயலாக்கின் எபெக்டை தருகிறது. விஜய் சேதுபதியையும் நண்பர்களையும் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் அடித்து துவைக்கும் மறைவிடத்துக்கு சரியாக வரும் ஆருர்தாஸிடம், எப்படி இடத்தை கண்டு பிடிச்ச என்று கேட்க, காவல்துறை நம் நண்பன் என்று அவர் பதிலளிக்கையில் தியேட்டர் அதிர்கிறது.


அதேபோல், அடிபின்னுகிற நேரத்தில், இதுதான் இருட்டறையில் முரட்டு குத்தா என்று அந்த வலியிலும் நக்கல்விடுவது.

படத்தின் தன்மைக்கு இயைந்து வருகிறது இசை. பேங்க் மேனேஜரின் பெண்ணை கடத்தி, அவரது அலுவலக அறைக்கே சென்று விஜய் சேதுபதி பணத்தை வாங்கிவிட்டு வெளியேறும் காட்சியில் ரசிகர்களை கைத்தட்ட வைத்ததில் இசையமைப்பாளரின் பங்கும் கணிசமானது. படத்தின் தன்மையை மீறாத பாடல்கள். இசைக்கு சொன்ன அனைத்தும் ஒளிப்பதிவுக்கும், எடிட்டிங்குக்கும் பொருந்தும்.

இயக்குனர்கள் தேர்வு செய்யும் கதையில் பெரிதாக வித்தியாசம் இருப்பதில்லை. அதனை அவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்பதில்தான் ஒருவர்; சிறந்த இயக்குனரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது

சாதாரண கதைதான். ஆனால் கதாபாத்திரங்களின் உருவாக்கம், திரைக்கதையில் சட்சட்டென்று வரும் திருப்பங்கள், ஆட்சியையும், அரசியல்வாதிகளையும் நேரடியாக விமர்சிக்காமல் துகிலுரிக்கும் நேர்த்தி என சூதுகவ்வும் கொண்டாட்டமான புத்துணர்ச்சிக்கு நூறு சதம் உத்தரவாதம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top