புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் ரஜினிகாந்த் தனது 62வது பிறந்தநாளின்போது தான் பெரிய ஹீரோவாகக் காரணமாக இருந்த நடிகர் கமல் ஹாசன் பற்றி மனம் திறந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் அவர் தனது நண்பர் கமல் பற்றி கூறுகையில், 1975ல் நான் நடிக்க வந்த புதிதில் கமல் ஹாசன் பெரிய நடிகர். அவர் அப்போது எவ்வளவு பெரிய நடிகர்
என்பது இந்த தலைமுறைக்கு தெரியாது. அவர் தற்போதை விட அப்போது பெரிய நடிகராக இருந்தார். எனது குரு பாலச்சந்திரின் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தேன். அதன் பிறகு நான் நடித்த 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, ஆடு புலி ஆட்டம், அவள் அப்படித் தான் ஆகியவை ஹிட் படங்கள். அப்போது கமல் மட்டும் ரஜினியை எடுக்காதீர்கள் என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தார் என்றால் என்னை யாருமே அந்த படங்களில் நடிக்க வைத்திருக்க மாட்டார்கள்.

 
கமல் பரிந்துரையின் பேரில் தான் என்னை இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் எடுத்தார்கள். நான் பெரிய நடிகனானதும் ஒரு நாள் கமல் என்னை அழைத்து பேசினார். ரஜினி நீங்கள் தனியாக சிங்கிள் ஹீரோவாக நடித்தால் தான் உங்களுக்கு எதிர்காலம். இல்லை என்றால் சினிமா உங்களைப் பயன்படுத்திக் கொள்ளும். நீங்கள் வளரவே முடியாது என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நான் தனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து பெரிய ஆளாக ஆனேன். மறுபடியும் ஒரு நாள் கமல் அழைத்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இடையே பகை கிடையாது. ஆனால் சினிமா உலகம் அவர்களை பிரித்து வைத்துவிட்டது. சினிமா உலகம் அவர்களைப் பிரித்ததால் அவர்களின் ரசிகர்களும் பிரிந்தார்கள். அந்த நிலை நமக்கும் வந்துவிடக் கூடாது. நான் பணியாற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுடன் நீங்களும் பணியாற்ற வேண்டும் என்றார்.

அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கமல் போன்ற ஜாம்பவான் இருக்கும் கோலிவுட்டில் நான் எப்படி பெரிய நடிகன் ஆனேன் என்று மம்மூட்டி, மோகன் லால், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆச்சரியப்பட்டனர். காரணம் ரொம்ப சிம்பிள். கமல் ஹாசனின் நடிப்பைப் பார்த்து வளர்ந்த நடிகன் நான். கமல் அருகில் இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. 'அவர்கள்' பட ஷூட்டிங்கில் நான் வெளியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பாலச்சந்தருக்கு கோபம் வந்துவிட்டது. என்னை அழைத்து என்ன தம்மடிக்க போயிட்டீங்களா, கமல் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர் எப்படி நடிக்கிறார் என்பதை கவனியுங்கள், அப்போது தான் உங்கள் நடிப்புத் திறமை கூடும் என்றார். அதில் இருந்து கமல் நடித்தால் நான் எங்கேயும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top