விமானத்தில் மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற மலேசிய தொழிலதிபருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. விமானம் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. டாக்டர்கள் சோதனையிட்டபோது,
அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு விமானம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 260 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானத்தில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமத்பின்அப்துல்லா (வயது 86) தனது உறவினர்களுடன் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்வதற்காக பயணம் செய்தார்.
சென்னை வான் எல்லையில் நேற்று மாலை 6.30 மணிக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது அஹமத்பின்அப்துல்லாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையறிந்த அவரது உறவினர்கள் விமான பணியாளர்களிடம் தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க அவர்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்ள வான் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட விமான ஊழியர்கள், மனிதாபிமான அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டனர். இதனையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
விமானம் தரை இறங்கியவுடன் தயாராக இருந்த டாக்டர்கள் குழு, உடனே விமானத்திற்குள் சென்று பயணியை பரிசோதித்து பார்த்தனர். ஆனால் பயணி ஏற்கனவே இறந்திருந்தது தெரிய வந்தது.
விமான நிலையத்தில் பயணி இறந்தால், அவரது உடலை எடுத்துச்செல்ல பல்வேறு சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருப்பதால், இறந்த பயணியுடன் வந்திருந்தவர்கள், அதே விமானத்தில் பிணத்தை எடுத்துச்செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து இரவு 8 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக