விபத்தில் உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுப்பதாக யாழ். போதனா
வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
யாழ். நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தனபாலசிங்கம் (வயது 68) என்ற வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலத்தையே மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
இச் சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வயோதிபர் நல்லூர் பகுதியில் வசிக்கும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து 13 வருடங்களாக யாழ். பண்ணை பஸ்தரிப்பு நிலையத்தில் வசித்து வந்துள்ளார்.
சம்பவதினமான நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வேலணையில் இருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று யாழ்ப்பாணச் சந்தியிலுள்ள தபால் நிலயத்திற்கு முன்னால் வைத்து குறித்த வயோதிபரை மோதியதில் அவர் கீழே விழுந்து பேருந்தின் சில்லில் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதித் திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
வயோதிபரின் சடலத்தை பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் வழங்க இருந்த நிலையில் வயோதிபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால் சடலம் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக