தென் ஆப்ரிக்காவில் பள்ளியில் உடன் படிக்கும் மாணவியிடம் பேசியதால் இந்திய வம்சாவளி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்ரிக்கா டர்பன் நகரை சேர்ந்த ஜெய்சி மூட்லே என்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மகன் தரேஷன் மூட்லே(16) அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான்.
பள்ளியில் ஓய்வு நேரத்தில் உடன் படிக்கும் மற்றொரு மாணவியிடம் பேசியுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவியின் சகோதரன், தரேஷனை கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கி உள்ளான்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. மாணவன் கத்தியுடன் பள்ளிக்கு வந்தது எப்படி என்ற சர்ச்சையும் எழுந்தது. இதுதொடர்பாக தரேஷனை தாக்கிய மாணவனிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
பின்னர் தரேஷன் மற்றும் அவனது தம்பி இருவரும் வீட்டுக்கு செல்லும் போது ஒரு கும்பல் இருவரையும் வழிமறித்து தாக்கியது. இதில் தரேஷன் குத்தி கொலை செய்யப்பட்டான். அவனது தம்பிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தரேஷன் அப்பா ஊடகத்தினரிடம் கூறுகையில், பள்ளியில் உடன் படிக்கும் மாணவியிடம் பேசியதற்காக எனது மகனை கொலை செய்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடக்கு டர்பனில் 2 மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். பள்ளிக்கு மாணவர்கள் கத்தியுடன் வருவது, மாணவர்களை மர்ம கும்பல் தாக்குவது, கொலை செய்வது உள்ளிட்ட சம்பவம் தென் ஆப்ரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக