ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானின் புதிய
பிரதமராக ஷின்சோ அபே பொறுப்பேற்றார்.
6 மாதங்கள் ஆகியும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இல்லத்துக்கு அவர் குடிபெயரவில்லை.
பிரதமரின் அரசு இல்லத்தில் ஆவி நடமாடுவதாகவும், அதன் காரணமாக அந்த இல்லத்துக்கு குடிபெயர அபே மறுத்து வருவதாகவும் புரளி நிலவுகிறது.
இது உண்மையா? என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அமைச்சரவைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பிரதமரின் செயல் அலுவலகத்தின் இரண்டாவது வாயிலாக இந்த இல்லம் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த இல்லத்துக்கு குடிபெயர காலதாமதம் செய்வதால், அவசர காலத்தில் பிரதமர் விரைவாக செயல்படுவதற்கு தடையாக அமையும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கேள்விக்கு அபே தலைமையிலான அமைச்சரவை நேற்று எழுத்துப் பூர்வமாக பதில் அனுப்பி உள்ளது.
அதில், அரசு இல்லத்துக்கு பிரதமர் குடிபெயராமல் இருப்பதற்கு ஆவி நடமாட்டம்தான் காரணம் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.