இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி கல்குண்டு பகுதியை சேர்ந்தவர் பாஷா (எ) பாதுஷா. பெங்களூரில் பேக்கரி மாஸ்டராக உள்ளார். இவர்
மனைவியை விவாகரத்து செய்து விட்டவர். இந்நிலையில் சிங்காரப்பேட்டையை சேர்ந்த அன்வரின் மகள் ரெசியா (29). இவரும் விவாகரத்தானவர்.
ரெசியாவிற்கும் பாதுஷாவிற்கும் கடந்த ஓராண்டிற்கு முன் திருமணம் ஆனது. ரெசியா தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். ரெசியா பாதுஷாவின் தந்தை பஷீர், தாயார் அம்லு என்கிற அமீனாபீ ஆகியோருடன் கல்குண்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரில் பாதுஷாவிற்கும், அவரது உறவினரான முஸ்தபா மனைவி அசீனா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் பெங்களூரில் இருந்து திரும்பிய பாதுஷா, அசீனாவையும் உடன் அழைத்து வந்துள்ளார். இது ரெசியாவிற்கு தெரியவந்தது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை ரெசியா படுக்கையில் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து ரெசியாவின் தந்தை கல்லாவி போலீசில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதில் ரெசியா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாதுஷா, அவரது தந்தை பஷீர் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பாதுஷாவின் தாயார் அம்லு என்கிற அமீனாபீ, கள்ளக்காதலி அசீனா ஆகியோரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.