கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
தாயைக் கொலை செய்து மகளை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரே தப்பிச் செல்லும் போது மரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிட்டிகல மத்தக்க பிரதேசத்தில் 73 வயதான இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்து அவருடன் வசித்து வந்த பெண்ணையே குறித்த சந்தேகநபர் கடத்திச் சென்று பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் அப்பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று முந்தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொலை செய்வதற்காக தான் பயன்படுத்திய ஆயுதத்தை மத்தக காட்டுப் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக கூறி பொலிஸரை அழைத்துச் சென்ற சந்தேகநபர், தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியபோது காட்டில் விழுந்து கல் ஒன்றில் அவரது தலை அடியுண்ட நிலையில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தாயின் சடலம் அழுகிய நிலையில் கடந்த 16ஆம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சந்தேகநபரின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது