புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகை தேவயானி தயாரிப்பில், அவருடைய கணவர் ராஜகுமாரன் இயக்கி ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'திருமதி தமிழ்'.


பெண்களின் சம்மதம் இல்லாமல் வலுகட்டாயமாக நடைபெறும் திருமணங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த ஹீரோ ராஜகுமாரன், தனது தாய்மாமனான ராதாரவியிடம் வளர்கிறார். ராதாரவியின் மகளான தேவயானிக்கும், ராஜகுமாரனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயது முதல் பேசி வரும் ராதாரவி, ஒரு கட்டத்தில் வேறு ஒருவருக்கு தேவயானியை, ராஜகுமாரனுக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துவிடுகிறார். இந்த உண்மையை தெரிந்துகொண்ட ராஜகுமாரன், ஊரை விட்டு சென்னையில் உள்ள தனது நண்பனை தேடிச் செல்லும் இடத்தில், கீர்த்தி சாவ்லாவை சந்திக்கிறார்.

ராஜகுமாரனை கீர்த்தி சாவ்லா காதலிக்க, அந்த காதலுக்கு கீர்த்தி சாவ்லாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கீர்த்தி சாவ்லாவை வேறு ஒருவருக்கு திருமணமும் செய்து வைத்துவிடுகிறார். இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் ராஜகுமாரன் போலீசாரால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் ராஜகுமாரன், கீர்த்தி சாவ்லாவுக்கு நடைபெற்ற விருப்பமில்லாத திருமணத்தை எதிர்த்து நீதிமன்றம் மூலம் போராடுகிறார். இந்த போராட்டத்தில் வழக்கறிஞரான மற்றொரு தேவயானி ராஜகுமாரனுக்காக நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.

இறுதியில் பெண்களுக்கு விருப்பமில்லாமல் நடைபெறும் திருமணத்தினால் என்ன என்ன பாதிப்பு ஏற்படுகிறது, இதை தடுத்து நிறுத்த என்ன வழி என்று நீதிமன்றத்தில் வாதிடும் தேவயானி, இந்த வழக்கில் வெற்றி பெற்றா இல்லையா? கீர்த்தி சாவ்லாவின் காதலை ராஜகுமாரன் ஏற்றுக்கொண்டாரா இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பெண்களுக்கான படமாக எடுக்க வேண்டும் என்ற முடிவில், ராஜகுமாரன் நல்ல கருவை கதையாக்கியிருக்கிறார். ஆனால், அதற்கு திரைக்கதை அமைத்த விதம் தான் ஜவ்வுப் போல இழுத்து, ரசிகர்களை சிறிது இம்சைப் படுத்தியிருக்கிறது.

ராஜகுமாரன், ஹீரோவாக நடித்தது தப்பில்லை. ஆனால், அவரை ஹீரோ என்று ரசிகர்களுக்கு காண்பிப்பதற்காகவே படத்தின் முதல் பாதி அமைந்திருப்பது சற்று சலிப்பு ஏற்பட வைக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாதில் வரும் நீதிமன்ற காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. வழக்கறிஞராக நடித்திருக்கும் தேவயானியின் நடிப்பு ரசிக்கும்படியாக உள்ளது.

ராஜகுமாரான், ஆட்டம், சண்டை என்று கமர்ஷியல் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார். வசனம் உச்சரிக்கும் போதும், ரியாக்ஷன் கொடுக்கும்போதும் ஏதோ 1970களில் உள்ள ஹீரோக்கள் போல நடித்திருப்பது ரொம்ப காமெடியாக இருக்கிறது. எம்ஜிஆர் படம் அதிகமாகப் பார்த்து நடிக்க ஆரம்பித்திருப்பார் போல, பல இடங்களில் எம்ஜிஆர் பாணியை பின்பற்றியிருக்கிறார்.

இரட்டை வேடங்களில் தேவயானி நடித்திருக்கிறார். ஒரு வேடத்தில் பள்ளி மாணவியாகவும், மற்றொரு வேடத்தில் வழக்கறிஞராகவும் நடித்திருக்கிறார். பள்ளி வேடத்தில் வரும் தேவயானியை காட்டிலும், வழக்கறிஞராக வரும் தேவயானி அழகிலும், நடிப்பிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

கீர்த்தி சாவ்லா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ராதாரவி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர் அவர் வேலை செய்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அவர்களுடைய கதாபாத்திரமும், நடிப்பும் கனமாக இல்லை. மலேசியா வாசுதேவன், மட்டும் சில காட்சிகள் வந்தாலும், தனது பழைய வில்லத்தனத்தை மீண்டும் இப்படத்தில் காண்பித்து அசத்தியிருக்கிறார்.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்துமே அமைதினான மொலோடியாக உள்ளது. தமிழ் தமிழ் என்ற பாடல் முனு முனுக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான்.

படத்தில் சொல்லும்படியான புதுமையான விஷயங்கள் ஏதும் இல்லை என்றாலும், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண்களுக்கான படம் என்று இப்படத்தை சொல்லலாம். அதிலும், இயக்குநர் விக்ரமனாகட்டும், அவருடைய சிஷ்யர்களாகட்டும், மேல்மாடி போஷன் வீட்டை விடவே மாட்டார்கள் போலிருக்கிறது. இந்த படத்திலும் அதே பாணியைதான் ராஜகுமாரன் பின்பற்றியிருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் தேவையில்லாத ஏகப்பட்ட காட்சிகள் வருவதால், சுவாரஸ்யமான இரண்டாம் பாதி கூட ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. கத்திரியைப் போட்டு படத்தின் முதல் பாதியை சற்று சுருக்கினால், திருமதி தமிழ் படம், தமிழக திருமதிகள் கொண்டாடும் படமாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top