சித்ரா பெளர்ணமி இன்றாகும். இந்து ஆலயங்களில் குறிப்பாக சிவன், அம்மன் ஆலயங்களில் மிக விசேடமாக அனுஷ்டிக்கப்படுகின்ற விரதம் இதுவாகும்.
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருகிறது. ஆயினும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியை இந்துக்கள் ´சித்ரா பெளர்ணமி´ என்று சிறப்பித்து கொண்டாடுகின்றனர். சித்ரா பெளர்ணமி இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.02 மணிக்கு ஆரம்பித்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.02 வரை உள்ளது.
சித்ரா பெளர்ணமி என்பது சித்ர குப்தனுக்குரிய நாள் என்பதால் இன்று எம் பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்பவர்களுக்கு யம பயம் நீங்கப் பெறுவர். சித்ரா பெளர்ணமியன்று மாலையில் ஒருமுறை ஸ்நானம் செய்து, இறைவனுக்கு படையல் செய்து பூஜித்து, சித்ரகுப்தனை மனதில் எண்ணி, ‘நாங்கள் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்’ என்று பிரார்த்திப்பது இந்துக்களின் மரபாக இருந்துவந்துள்ளது.
பூவுலகில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியங்களைக் கணக்கு வைத்துக்கொண்டு, அதன்படி அவர்களுக்கு சொர்க்க, நகரங்களை முடிவு செய்வது யமனுக்கு ஒரு பெரிய வேலையாக இருந்தது. அதனால் இந்த பாவ, புண்ணிய கணக்குகளைக் குறித்து வைத்துக்கொண்டு, மனிதர்கள் மரணத்திற்குப் பின் தன் முன் வந்து நிற்கும் போது அவர்கள் மண்ணுலகில் செய்த பாவ புண்ணியங்களை எடுத்துச் சொல்ல ஒரு உதவியாளர் தேவைப்பட்டார்.
எம தர்மராஜனுக்கு தன் தேவையை அவர் பிரம்மாவிடம் சொன்னார். பிரம்மா, எமன் பொருட்டு இதற்கென தவத்தில் அமர்ந்தார்.
தவத்தின் இறுதியில் அவர் முன் ஓர் இளைஞன் கையில் எழுதுகோலுடன் தோன்றினான். அவனுக்கு பிரம்மாவே சித்ரகுப்தன் என்று பெயரிட்டு, எமனுக்கு கணக்குப்பிள்ளையாக அமர்த்தினார் என்பது புராணக் கதை.
0 கருத்து:
கருத்துரையிடுக