என் மனைவி குஷ்புவுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகை ஹன்சிகா- டைரக்டர் சுந்தர்.சி
சித்தார்த், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் 'தீயா வேலை செய்யனும்குமாரு'. சுந்தர்.சி இயக்குகிறார். யூ.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கின்றன. இப்படத்தின் பாடல்
வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் சுந்தர்.சி பங்கேற்று பேசியதாவது:-
ஹன்சிகாவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நல்ல அனுபவம். நான் படம் ஆரம்பிக்கும் முன்கதை விவாதத்துக்கு நிறைய நாள் எடுத்துக் கொள்வேன். படப்பிடிப்பு தொடங்கியதும் ஆறு மாதத்துக்குள் படத்தை முடித்து விட நினைப்பேன். விரைவாக முடிந்தால் தான் படத்தின் புதுத்தன்மை மாறாமல் இருக்கும். தயாரிப்பாளருக்கும் நல்லது. அதற்கேற்றபடி ஹன்சிகா ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கிறார்கள். உருவத்தால் மட்டுமல்ல, நல்ல நடிகை என்ற விதத்திலும் ஹன்சிகா என்னை கவர்ந்து விட்டார். குஷ்புவை வைத்து மூன்று படங்கள் இயக்கி இருப்பேன். அவர் அர்ப்பணிப்பு ஆச்சரியமாக இருக்கும். குஷ்புவுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகை ஹன்சிகா. காலையில் ஏழு மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுவார். அவ்வப்போது கேரவேனுக்குள் போய் ஒளிந்து கொள்கிற வழக்கம் அவரிடம் கிடையாது. படப்பிடிப்பு முடிந்துதான் போவார்.
இந்த ஆர்ப்பணிப்பு உணர்வு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கு மட்டுமல்ல ஜப்பான் போனபோதும் இப்படித்தான் நடந்து கொண்டார். கடுமையான குளிரில் நடித்தார். கதாநாயகி எப்படி உடை அணிந்து இருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி குறைந்த உடையுடன் உறைய வைக்கும் குளிரில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நடித்து கொடுத்தார்.
நான் எத்தனையோ நடிகைகளை இயக்கி இருக்கிறேன். யாரும் இப்படி ஒத்துழைப்பு கொடுத்தது இல்லை. சித்தார்த்தும் கூடப்பிறந்த தம்பி மாதிரி ஆகிவிட்டார்.
இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.
விழாவில் நடிகை குஷ்பு தனது மகள்கள் அவந்திகா, அனந்திதா ஆகியோருடன் கலந்து கொண்டார். நடிகர்கள் ஆர்யா, சித்தார்த், நடிகை ஹன்சிகா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பாண்டிராஜ், கே.வி.ஆனந்த், நலன் குமார சாமி, பாலாஜிமோகன், தயாரிப்பாளர்கள் யு.டி.வி.தனஞ்செயன், கே.எஸ்.சீனிவாசன், எம்.முரளி, டி.சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக