புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவைச் சேர்ந்த டேரில், தென் கொரியாவைச் சேர்ந்த யங்-மி என்ற தம்பதியருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தைக்கு பிறவியிலேயே மூச்சுக்குழாய் இல்லை.

இதனால் மூச்சுவிட முடியாமலும், எதையும் விழுங்க முடியாமலும் அந்த குழந்தை உயிருக்கு போராடி வந்தது. ஹன்னா வாரன் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை, பிறந்தது முதல் சியோல் மருத்துவமனையில் தான் இருந்து வந்தது.

அங்கு தீவிர பராமரிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கையாக மூச்சுக்குழாய் பொருத்தி அதன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டதுடன் உணவும் தொடர்ந்து வழங்கப்பட்டது.

ஆனாலும், இந்த முயற்சி நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்காது என்பதை உணர்ந்த டொக்டர்கள் மாற்று ஏற்பாடு செய்வது பற்றி சிந்தித்தனர்.

அதன்படி சர்வதேச டொக்டர்கள் குழு, அந்த குழந்தையின் எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம்செல்களை எடுத்து பிளாஸ்டிக் பைபருடன் சேர்த்து சோதனைக் கூடத்தில் புதிதாக மூச்சுக்குழாயை உருவாக்கினர்.

பின்னர் அந்த ஸ்டெம்செல் மூச்சுக்குழாயை, கடந்த 9ம் திகதி அன்று குழந்தைக்கு பொருத்தினர். அமெரிக்காவின் பியோரியா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் 9 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

மருத்துவ உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது இந்த அறுவைசிகிச்சை. மேலும் மரணத்தில் இருந்து மீண்ட குழந்தை ஹன்னா வாரன் இன்னும் ஒரு சில மாதங்களில் நன்கு குணமடைந்து விடுவாள் என்று டொக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குழந்தை உயிர் பிழைத்ததால் மகிழ்ச்சியடைந்த பெற்றோர், டொக்டர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உலகிலேயே மிகச்சிறிய வயதில் உயிரி-பொறியியல் உறுப்பு பெற்ற குழந்தை ஹன்னா வாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா மருத்துவ ஆய்வு மைய அறுவை சிகிச்சை நிபுணர் பவோலோ மச்சியாரினி கூறுகையில், இந்த அறுவைசிகிச்சை மூலம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதுடன், சிகிச்சைக்குப் பின்னர் அந்த குழந்தையால் சாப்பிடவோ, குடிக்கவோ, விழுங்கவோ, மற்ற குழந்தைகளைப் போல் பேசவோ முடியும்.

இது மருத்துவ அதிசயமாகும். இதன் மூலம் மாற்று அறுவைச் சிகிச்சையின் எல்லையை நாங்கள் கடந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top