சென்னையில் சமூக சேவகர் மணிவண்ணனுக்கு உதவிக்கரமாக இருக்கிறார் சட்டக்கல்லூரி மாணவி சாந்தினி. ஒருகட்டத்தில் மணிவண்ணன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த
கொலை தற்கொலையாக மாற்றப்படுகிறது. ஆனால், இது கொலை என்பதை நிரூபிப்பதற்காக சாந்தினி அதற்குண்டான வேலைகளில் களமிறங்குகிறார்.
இதனைக் கண்டறியும் கொலைக் கும்பல் சாந்தினியை தீர்த்துக்கட்ட நினைக்கிறது. இந்நிலையில், சாந்தினியை காதலிக்கும் நகுல் சாந்தினியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இருவரையும் தீர்த்துக்கட்ட அவர்களை துரத்துகிறது அந்த கொலைக்கார கும்பல்.
மறுமுனையில், இமாச்சலப் பிரதேசத்தில் தன் தாய் சீதா மற்றும் மாமா வாசு விகரமின் ஆதரவோடு செல்லப்பிள்ளையாக வளர்ந்து வருகிறார் ஜீவா எனும் நகுல். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக அங்குள்ள மிலிட்டரி கேம்பிற்குள் சென்றுவிடுகிறார். அதனால் அவருக்கு அங்கு சிறு தண்டனை கொடுக்கப்படுகிறது. அப்போது நகுலைப் பார்க்கும் ஒரு இராணுவ அதிகாரி சென்னையில் தன்னுடன் படித்த நண்பனைப் போலவே ஜீவா எனும் நகுல் இருப்பதை கண்டு அவனிடம் சொல்கிறார். அவர் மூலமாக சென்னையில் வசிக்கும் ராஜா என்ற நகுலைப் பற்றிய முழு விபரத்தையும் அறிகிறான் ஜீவா. மேலும், ராஜா நகுலை ஒருதலையாக காதலித்த அவனி மோடியைப் பற்றிய தகவலையும் அவனுக்கு கூறுகிறார்.
தன்னைப் போலவே இன்னொருவர் இருப்பதை அறிந்துகொண்ட ஜீவா எனும் நகுல், அவனைப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறான். ஒருகட்டத்தில் தன்னுடைய தாய் மற்றும் மாமாவிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு பயணமாகிறார். போகும் வழியில் அவனி மோடியைச் சந்திக்கிறார். அவரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு வருகிறார்.
சென்னைக்கு வரும் ஜீவா நகுல், சென்னையில் ராஜா நகுலை சந்தித்தாரா? கொலை கும்பலிடம் இருந்து சாந்தினியை காப்பாற்றி ராஜா நகுல் சாந்தினியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
நகுல் ஜீவா-ராஜா என இருவேறு கதாபாத்திரங்களில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாக வெகுளித்தனம் காட்டுவதிலும், கிக்-பாக்ஸிங்-ல் மிரட்டுவதுமாக ரசிக்க வைக்கிறார்.
இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். சாந்தினி ஹோம்லி என்றால், அவனி மோடி கிளாமரில் கலக்கியிருக்கிறார். நடிப்பிலும் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். மணிவண்ணன், தூங்காநகரம் இயக்குனர் கௌரவ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், சுரேஷ், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. எல்லோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, சமூக சேவகராக வரும் மணிவண்ணனின் கெட்டப்பும், செயற்கை விதைகளால் மனித இனத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை எடுத்துக்கூறும் பேச்சும் பிரமாதம்.
புதுமுக இயக்குனர் பிருத்வி ராஜ்குமார் படம் பார்ப்பவர்களுக்கு நகுல் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இறுதியில் ஜீவா-ராஜா ஆகிய இருவரும் ஒருவரே என முடித்திருப்பது சுவாரஸ்யம்.
ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. எரிச்சலூட்டும் இடங்களில் இவருடைய பாடல்கள் காதுகளுக்கு இனிமையை கொடுத்திருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவு, வெற்றிமாறனின் வசனம், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றன.
செயற்கை விதைகளை இறக்குமதி செய்தால் மண்வளம் நாசமாகப் போவதைவிட எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பதை விளக்கும் நல்ல படமாக இருந்தாலும், திரைக்கதையில் இயக்குனர் சொதப்பி விட்டார். மேலும், இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி என்ற பெயரில் படம்பிடித்து காட்டியிருப்பது எரிச்சலைத் தூண்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ ராஜாவாக்க முயன்றிருக்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக