விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சியாக மாற தி.மு.க., ஆதரவாக கடந்த சட்டசபை தேர்தலில் குரல் கொடுத்தார் நடிகர் வடிவேலு. ஆனால் கடைசியில் திமுக., படுதோல்வியை சந்திக்க கடந்த இரண்டு
ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு இன்றி தவித்து வந்தார் வடிவேலு. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கும் வடிவேலு, தற்போது போட்டா போட்டி இயக்குனர் யுவராஜ் இயக்கும் கஜபுஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தில் வடிவேலு ஜோடியாக அஜீத்தின் பில்லா-2 பட நாயகி பார்வதி ஓமனக்குட்டனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. காமெடி நடிகருடன் ஜோடி சேர்வதா என்று நடிகைகள் பலர் தயங்கியபோதும், பார்வதி ஓமனக்குட்டன் முதலில் சம்மதித்தாராம். அதேசமயம் தனக்கு சம்பளமாக ரூ.1.50 கோடி வேண்டும் என்று கேட்டாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனமோ ரூ.70 லட்சம் தருகிறோம் என்றார்களாம். கொடுத்தால் ஒன்றரை கோடி கொடுங்கள், இல்லையேல் ஆளை விடுங்கள் என்று சொல்லிவிட்டு இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம் பார்வதி ஓமனக்குட்டன்.
இதனையடுத்து வடிவேலுவுக்கு வேறு ஒரு நாயகியை தேடி வந்த படக்குழு இப்போது மீனாட்சி தீட்சித்தை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளனர். இவர் தெலுங்கில் சில படங்களில் முக்கிய வேடத்திலும், சில படங்களில் குத்தாட்டமும் ஆடியுள்ளார். அதுமட்டுமில்லை, மீனாட்சி தீட்சித் ஏற்கனவே தமிழில், விஜயகாந்த் இயக்கிய தனது முதல்படமான விருதகிரியில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.