தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி தண்ணீருக்குப் பதிலாக பாலை பாதுகாக்கும் திரவத்தைத் தவறுதலாக அருந்தியதால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை எனும் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கறந்த பாலை சிறிது நேரம் பழுதுபடாமல் பாதுகாப்பதற்கு பண்ணையாளர்கள் பாலுடன் கலந்து பயன்படுத்தும் ஒரு வகை ரசாயனத் திரவத்தை குறித்த சிறுமி தவறுதலாக பருகியுள்ளார்.
பூமரத்தடிச்சேனையைச் சேர்ந்த மூன்றரை வயதான கணேசன் ஜான்ஸி என்ற சிறுமியே தண்ணீர் என நினைத்து இந்த ரசாயனத் திரவத்தைப் பருகி உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் தாய் வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்புப் பயிற்சி பெறுவதற்காக கொழும்புக்குச் சென்றுள்ளதால் அம்மம்மாவின் பராமரிப்பிலேயே சிறுமி உள்ளார் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் அம்மம்மா பால் விற்ற கணக்குவழக்குகளில் மூழ்கியிருந்த சமயம் சிறுமி தண்ணீர் கேட்டுள்ளார். அப்பொழுது, தண்ணீர் அங்கு இருக்கிறது எடுத்துக் குடி என அம்மம்மா கூறியவுடன் சிறுமி தவறுதலாக இந்த இரசாயனத் திரவத்தைப் பருகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சற்று நேரத்தில் மயக்கமுற்ற சிறுமியை மூதூர் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக பிரிவுக் கிராம சேவையாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.