காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை அவரது மாமனாருடன் வெட்டி கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் அருகே
புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சிவா (21). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பணி நிமித்தமாக அடிக்கடி இவர் சென்னை செல்வது வழக்கம். சென்னை பொன்னேரியை சேர்ந்தவர் காசிநாடார். இவரது மகள் சவுமியா (20). சிவா சென்னை சென்ற போது சவுமியாவை சந்தித்ததில் காதல் ஏற்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சவுமியாவை நாகர்கோவில் அழைத்து வந்து சிவா திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு சவுமியாவின் பெற்றோரும், சகோதரரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் சவுமியா காதலனை கரம் பிடித்தார். கணவர் வீட்டில் சவுமியா குடும்பம் நடத்தி வந்தார்.
நேற்று மாலையில் ஒரு காரில் சவுமியாவின் சகோதரர் சபரி உட்பட நான்கு பேர் சவுமியா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு முதலில் அன்பாக பேசுவது போல் நடித்த சபரி திடீர் என்று சவுமியாவை கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதை தொடர்ந்து கணவர் சிவா மற்றும் மாமனார் ஜெயராம் ஆகியோரையும் வெட்டினார். உயிருக்கு பயந்து வீட்டுக்கு வெளியே ஓடிய இருவரையும் அவர்கள் ஓடஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பி விட்டார். இதில் படுகாயமடைந்த இருவரும் நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயராம் ஆஸ்பத்திரியில் இறந்தார். சிவாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.