"குரு", "பா", "ஹே பேபி" போன்ற இந்தி படங்களில் நடித்த வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட "தி டர்ட்டி பிக்சர்ஸ்" படம் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக மத்திய அரசின்
தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து கஹானி என்ற படத்தில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நடிகை வித்யாபாலன் அங்கு நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* கேன்ஸ் திரைப்பட விழா அனுபவம் குறித்து?
வித்தியாசமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. சிறந்த படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவிலும் இடம் பெற்றிருப்பதால், பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட, சிறந்த படங்களை பார்க்கும் அனுபவம் கிடைத்து உள்ளது. இந்த அனுபவத்தை, படங்களில் நடிக்கும்போது, பயன்படுத்துவேன்.
* விழாவில், உங்களின் உடை அலங்காரம் வித்தியாசமாக இருந்ததே?
நம் நாட்டின், பாரம்பரிய உடை அலங்காரத்துடன், விழாவில் பங்கேற்றேன். மூக்கில் வளையம், வித்தியாசமான புடவை, நகைகளை அணிந்திருந்ததால், பார்வையாளர்கள் கண்களுக்கு, அது, புதுமையானதாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது.
* புடவை மீது, உங்களுக்கு அப்படி என்ன காதல்?
எப்போதுமே, எனக்கு பிடித்த உடை, புடவை தான். தூங்கும்போது கூட, புடவையுடன் தூங்க வேண்டும் என, விரும்புவேன். முக்கிய விழாக்களுக்கு செல்லும்போது, புடவை தான், என் முதல் சாய்ஸ். கேன்ஸ் திரைப்பட விழாவிலும், புடவை அணிந்து சென்றது, இதனால் தான்.
* உங்களுடன் பங்கேற்றுள்ள சக நடுவர்கள் யார்?
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், "லைப் ஆப் பை பட இயக்குனர், ஆங் லீ, ஹாலிவுட் நடிகை, நிக்கோல் கிட்மான், ஆஸ்கர் விருது பெற்ற, கிறிஸ்டோப் வால்ட்ஸ், ஜப்பான் இயக்குனர், நவோமி கவாஸ் உள்ளிட்ட ஜாம்பவான்களுடனும், நடுவர் குழுவில், நானும் ஒருத்தியாக இருப்பதை, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.
* திருமணத்துக்கு பின் வித்யா பாலன் எப்படி?
திருமணம் நடந்து, நான்கு மாதங்கள் ஆகின்றன. அதனால், இது தொடர்பாக, எந்த தகவலையும்,
தற்போது தெரிவிப்பது, சரியாக இருக்காது என, நினைக்கிறேன். ஆனாலும், இந்த நான்கு மாத கால திருமண பந்தம், என் வாழ்க்கையில், பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.