அரசியல் பகை ஒரு பக்கமிருக்க, தன்னுடன் கூட்டணி அமைத்து காமெடி செய்து வந்த சிங்கமுத்துவும் தன்னை ஏமாற்றி நில மோசடி செய்து விட்டதாக சொல்லி, அவரை கோர்ட்டுக்கு இழுத்தார் வடிவேலு. இதனால் அதையடுத்து இருவரும் மாறி மாறி பேட்டிக்கொடுத்து
மீடியாக்களை சில மாதங்களாக பிசியாக்கி வைத்திருந்தனர். அதனால் இனிமேல் எக்காரணம் கொண்டும் சிங்கமுத்துவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்தார் வடிவேலு. அதேபோல் சிங்கமுத்துவும் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் எனறு சொல்லிக்கொண்டு தனித்து காமெடி செய்து வந்தார்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டு வனவாசத்துக்குப்பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலு, கஜபுஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். முன்னதாக, இரண்டு வருடத்துக்கு முன்பே அவரை புக் பண்ணிய இயக்குனர் அசோக்ராஜ் இயக்கும் ஒரு தடவை சொல்லு என்ற படத்தில் தற்போது காமெடியனாக நடித்து வருகிறார் வடிவேலு. இதே படத்திற்கு சிங்கமுத்துவும் அப்போது கமிட்டாகியிருந்ததால் அவரும் இப்படத்தில் நடிக்கிறார். ஆனால், இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லி விட்டார்களாம்.
அதன்காரணமாக, அவர்கள் இருவரும் சேர்ந்து காமெடி செய்ய வேண்டிய காட்சிகளைகூட தனித்தனியே படமாக்கி பின்னர் இணைத்து வருகின்றனர். ஆனால் எடிட் செய்து பார்த்தபோது தனித்தனியே படமாக்கியது போல் இல்லாமல் சேர்ந்து நடித்தது போலவே காட்சிகள் வந்துள்ளதாம். சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு டேக்கையும் சிங்கிள் டேக்கில் ஓ.கே செய்து கொடுத்தாராம் வடிவேலு.